கட்டுரை

சகோதர யுத்தம்

அந்திமழை இளங்கோவன்

சென்றமாதம் வெள்ளிக்கிழமை (24/01/2014) காலை  மு.க.அழகிரி தனது தந்தையைச் சந்தித்துப் பேசினார். அதிரடியான இந்த சந்திப்பு நிகழ்ந்த சில மணிநேரத்திலேயே  திமுக தலைமைக்கழகம் மு.க.அழகிரி கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப் படுவதாக அறிவித்தது.

அன்றிரவு சி.ஐ.டி.காலனி இல்லத்தில் திமுக தென்மாவட்டச் செயலாளர்களை அழைத்து கருணாநிதி பேசி  இருக்கிறார். கூட்டத்தில் தங்கம் தென்னரசுவும் சேடப்பட்டியாரும் உண்டு.

‘தென் மாவட்டங்களில் அழகிரியை நீக்குனதால ஏதாச்சும் பிரச்சினை வருமாய்யா?’ என்கிற தந்தையின் கேள்விக்கு,அழகிரியின் செல்வாக்கு தற்போது குறைந்து விட்டதாக கிட்ட தட்ட எல்லாரும் பதிலளித்துள்ளனர்.

மறுநாள் சனிக்கிழமை சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள வீட்டில் மு.க.அழகிரி, நிருபர்களிடம், ‘போட்டி வேட்பாளர்கள் இல்லாமலேயே திமுக தானாகவே தோற்றுப்போகும். நான் என்ன குழப்பம் செய்தேன். போஸ்டர் ஒட்டுவது குற்றமா?’ என்று கேட்டார்.

சண்டை, சமாதானம், அமைதி , சண்டை என்று நிகழ்ந்து கொண்டிருந்த அழகிரி  - ஸ்டாலின் யுத்த காண்டம் பல அத்தியாயங்களைக் கொண்டது. தற்போது இறுதி அத்தியாய நிகழ்வுகள்.

கடந்த 14 ஆண்டுகளாக அவ்வப்போது தலைப்பு செய்தியாகிக் கொண்டிருக்கும் மேற்படி யுத்தத்தின் விதை வெகு காலத்திற்கு முன்பாகவே விதைக்கப்பட்டிருக்க வேண்டும் .

அறிவாலயத்திற்கான பாகப்பிரிவினையாக பார்க்காமல், அப்பா மற்றும் இரண்டு மகன்களுக்கு இடையே நடக்கும் முக்கோணச் சிக்கலாக இதை அணுகுவோம்.

1941 ஆம் ஆண்டு DAVID LEVY என்கிற மனநலமருத்துவர்  ‘Sibling rivalry’  அதாவது ‘உடன்பிறப்பு பகை’ என்ற சொற்றொடரை அறிமுகப்படுத்துகிறார். குடும்பத்தின் புதிய குழந்தை பிறக்கும் போது ஏற்கனவே இருக்கும் மூத்த குழந்தை ஒரு வித இழப்பை அனுபவிக்க தொடங்குகிறது. தனது முந்தைய கவனிப்பில் ஏற்படும் குறையும், புதியவருக்குக் கொடுக்கப்படும் விஷேச கவனிப்பும் ஒரு வித கசப்பை மற்றவர் மனதில் ஏற்படுத்திவிடும் .

உடன்பிறப்பு பகையின் ( இனி உ.பகை) கிளாசிக் உதாரணமாக மும்பையின் நிகழ்ந்த சம்பவமொன்றை பார்க்கலாம்.

2006 ஏப்ரம் மாதம் 22 ஆம் தேதி காலை 7.30 . தெற்கு மும்பையில் உள்ள வெர்லியிலுள்ள அடுக்கு மாடிக் கட்டிடத்தின் பதினைந்தாவது மாடியிலுள்ள இரண்டு படுக்கையறை வீட்டின் முன் அறையில் அமர்ந்து நாளிதழைப் படித்துக் கொண்டிருக்கிறார் அண்ணன்.

வாசல் மணி அடிக்க அவரது மனைவி ரேகா அடுப்படியிலிருந்து போய் கதவு திறக்கிறார். அங்கே கணவரின் உடன்பிறப்பான பிரவின். உள்ளே வரவேற்று அமரச் சொல்லிவிட்டு பிரவினுக்கு காபி கலக்க மீண்டும் அடுப்படிக்கு செல்கிறார் ரேகா.  முன்னறையில் அண்ணனும் தம்பியும் மட்டும் தான். ஒரு ஓரத்தில் இருக்கும் டிவியில் காலை செய்தியை யாரோ வாசிக்கொண்டிருந்தார்கள். அண்ணன் கையிலிருந்த நாளிதழைப் படித்துக் கொண்டே அவ்வப்போது செய்தியை கவனித்துக் கொண்டிருந்தார். சோபாவின் ஓரத்தில் அமர்ந்திருந்த தம்பி  நிலைகொள்ளாமல் தவித்தார். அண்ணனையும் தொலைக்காட்சிப் பெட்டியையும், சுவரையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தார். இருவரும் பேசிக் கொள்ளவில்லை. காபி கலக்க  சென்றவரும் திரும்பி வரவில்லை.

மணி 7.40 பிரவின் எழுந்து அண்ணன் அருகில் சென்றார். தான் கையோடு கொண்டு வந்திருந்த Browning  0.32 கைத்துப்பாக்கி எடுத்து  அண்ணனை  நோக்கி மூன்று முறை சுட்டார். அடுத்த ஒரு மணி நேரத்திற்குள் செய்தி பார்த்துக் கொண்டிருந்த பிரமோத் மகாஜன் தலைப்புச் செய்தியானார்.

மருத்துவமனையில் உயிருக்கு போராடி பின் மரணமடைந்த மகாஜனை  அவரது தம்பி பிரவின் சந்திக்க வேண்டுமானால் அவரது பிஏ விடம் முன் கூட்டியே அப்பாயிண்ட்மெண்ட் வாங்க வேண்டுமென்பதில் தொடங்கி பல விஷயங்களால் பிரவீனின் மனதில் ‘உ. பகை ’  பிரம்மாண்டமாக வளர்ந்திருக்க வேண்டும் . மகாஜனின் தில்லி வீட்டு கதவிலிருந்த வாசகம் ‘Friends Welcome Anytime. Relatives by Appointment Only.

இந்த வாசகம் கூட பிரவீனிடம் பகை வளர்த்திருக்கலாம்.

‘அழகிய தீயே’ வில் தொடங்கி பல தமிழ் திரைப்படங்களில் நடித்த நடிகை நவ்யா நாயர் இளவயதில் தனக்கும் தனது இளைய தம்பிக்கும் இடையில்  மிகப் பெரிய உ.பகை இருந்ததாக  குறிப்பிடுள்ளார்.  உ.பகை முற்றிப்போய் தனது இளைய சகோதரனை கொன்று விடலாமா என்று கூட யோசித்துள்ளார். சமீபத்தில் இந்த தகவலை நவ்யா நாயர் வெளியிடும்  வரை அவரது பெற்றோருக்கு இது பற்றி தெரியாது.

உ.பகை என்பது உலகம் முழுவதும் பிரசித்தி பெற்ற ஒன்றுதான். விநாயகர் - முருகன் , பாண்டவர் - கௌரவர்கள் என்று பல இந்து புராணங்களிலும் , பைபிள் கதையான கைன் - ஏபில் என்று நீக்கமற நிறைந்த ஒன்று .

மற்ற விலங்கினங்களிலும் உ.பகை உண்டு. ஆடூச்ஞிடு உச்ஞ்டூஞு ( கருப்பு கழுகு ) இரண்டு முட்டைகள் இடும் முதலில் பொறிக்கும் குஞ்சு மற்றதை கொத்தி கொத்தியே அடுத்த சில நாட்களில் கொன்று விடும். கழுதைப்புலி வகையொன்றிலும் இந்த  உ.பகை மிகவும் உக்கிர மானது. மூத்த குட்டி 25 சதவீத இளைய குட்டிகளை கொன்று விடுவது உண்டு .

மிக்சிகன் பல்கலை கழகத்தின் Kyla Boyse ன் ஆய்வின் படி குழந்தைகள் தனது தனித்துவத்தை நிரூபிக்கத் தொடங்கும் போது தங்களது உடன்பிறப்புகளிடமிருந்து விலகுகிறார்கள். பிள்ளைகள் பல வேளைகளில்  தனக்கு தனது உடன்பிறப்பைவிட குறைந்த கவனத்தையே பெற்றோர் தருகின்றனர் என்கிறபோதும் உ.பகை அதிகமாகிறது. அழகிரி விஷயத்தில் கூட அவருக்கு தனது தாயான தயாளு அம்மாளிடம் இருக்குமளவிற்கு தந்தையிடம் ஒட்டுதல் இல்லாது போனதற்கு ஏதாவது மனக்குறை இருக்கலாம்.

அம்பானி சகோதரர்களான முகேஷ் - அனில் , புகழ்பெற்ற லதா மங்கேஷ்கர் - ஆஷா போன்ஸ்லே, இந்தி நடிகர் அமீர்கான் - பைசல்கான், அமிதாப் - அஜிதாபாச்சன் என்று இந்திய பிரபலங்களின் உ.பகைகள் தலைப்பு செய்தியாகியிருக்கிறது. அதிக புகழ் பெறாத அமிதாப்பின் தம்பியான அஜிதாப் ஆரம்ப காலங்களில் அமிதாப்பின் மேலாளராக இருந்தார். பின்னர் பிரச்னை ஏற்பட்டு பிரிந்த போது அமிதாப்பின் அந்தரங்கங்களை வெளியிட்டு புழுதி வாரி வீசினார்.

நம்மில் மூன்றில் ஒரு பாகத்தினரால் உடன்பிறப்புகளுடன் உள்ள பூர்வமான உறவு பாராட்ட முடியாது போவதற்கு சிறு வயதில் ஏற்பட்ட உ.பகை தான் காரணம் என்று ஓர் ஆய்வு தெரிவிக்கிறது. பெரும்பாலான உடன்பிறப்புகள் 60 வயதைக் கடக்கும்போது உ.பகை மறந்து சகஜமான உறவுக்கு திரும்புகிறார்கள்.

அனேகமாக பன்னிரெண்டாவது மாதத்திலிருந்து - 18 வது மாதத்திற்குள் குழந்தையால் தனது பெற்றோரின் கவனிப்பைப் புரிந்து கொள்ள முடிகிறது. அப்போதே புறக்கணிப்பிருந்தால் வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாத போதும் மனதில் பதிய ஆரம்பிக்கிறது. குழந்தைகள் செய்யும் பல சண்டைகள் ஒரு கவன ஈர்ப்பு தீர்மானம்தான்.

அழகிரியின் பல செயல்களை ஆழ்ந்து பார்க்கும் போது அவையெல்லாம் அவரது தந்தையின் கவனத்தை ஈர்க்கும் நடவடிக்கைகளோ என்று கூட தோன்றலாம். ஆனால் இந்த நடவடிக்கைகள் அவரது தந்தைக்கு புரிந்ததா இல்லையா என்பது அவர்களுக்குத்தான் தெரியும். கடந்த வருடம்  தி.மு.க.வின் தொழிலாளர் முன்னேற்றச் சங்கத்தின் பொதுக்குழுகூட்டத்தில் பேசிய கட்சி தலைவர் கருணாநிதி, ‘உங்களையெல்லாம் நான் கேட்டுக் கொள்வது ஒன்றே ஒன்றுதான். அது ஒற்றுமையாக இருங்கள். ஒருவருக்கொருவர் அன்பு பாராட்டுங்கள். நம்மவர்களையே எதிரிகள் போல் கருதாதீர்கள். ஏனென்றால் “பிரிவினை” பெருவினையாக மாறி தி.மு.க.வையே அழித்து விடும்” என்று பேசியது அழகிரிக்கான அறிவுரையாகத்தான் கருதப்பட்டது.

உ.பகையை மீறி சாதிப்பதற்கு பல வழிகள் இருக்கின்றன.

தனது உடன்பிறப்போடு நாற்காலிக்கு சண்டையிடாமல் தனக்கென மற்றொரு வழியைத் தெர்ந்தெடுத்துக் கொள்வது ஒன்று.

மற்றொன்று தன்னை விட திறமையான உடன்பிறப்பைப் பற்றிப் பொறாமைப்படாமல் தன்னைக் கூர்படுத்திக் கொள்வது.

 நார்வே நாட்டைச் சார்ந்த ஹென்றிக் ஆல்பட்டும் அவரது மனைவியும் பொறியியலாளர்கள். செஸ் விளையாட்டின் மேல் ஆர்வமுள்ள ஹென்றிக் தனது மூத்த மகளான எலனுக்கு செஸ் விளையாட கற்றுத் தந்தார். அவளும் அபாரமாக விளையாடினாள்.  இரண்டாவது மகன் பிறந்தான்.  அவனுக்கும் ஹென்றிக்  செஸ் விளையாட கற்றுத் தந்தார். தன்னை விட செஸ் விளையாட்டில் தேர்ச்சி பெற்ற அக்காவைத் தோற்கடிப்பது தான் தம்பியின் குறிக்கோளாக இருந்தது. தன்னை விட திறமையான உடன்பிறப்பைப் பற்றி பொறாமைப்படாமல் தன்னைக் கூர்படுத்திக் கொள்வதில் அவன் அதிக அக்கறை எடுத்துக் கொண்டான். தொடர்ச்சியாக திறமையை வளர்த்துக் கொண்ட அந்த சிறுவன் படிப்படியாக வெற்றியை ருசித்தான். உச்சகட்டமாக சென்னையில் தன்னை விட 21 வயது மூத்த உலக சேம்பியனைத் தோற்கடித்தான்.அந்த இளம் சாதனையாளர் மேக்னஸ் கர்ல்ஸன்.

திமுகவின் தலைமை நாற்காலி தற்போது  ஸ்டாலினுக்குத் தான்  என்பதை புரிந்து கொண்ட அழகிரி தனக்கென மற்றொரு வழியைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் அல்லது தன்னை வென்ற ஸ்டாலினைப் பற்றி பொறாமைப்படாமல் அரசியலில் தன்னைக் கூர்படுத்திக் கொள்ளலாம்.

பிப்ரவரி, 2014.